பகுதி1: இளையராஜா எனும் இசையியக்கம்

இளையராஜாவின் பாடல்கள் பேரிசையியக்கங்களின் சுருக்கக் குறிப்புகளாக விளங்குகின்றன – பிரேம் ரமேஷ் (இளையராஜா – இசையின் தத்துவமும் அழகியலும் நூலில்)


பிரேம் ரமேஷின் புத்தகத்தை முதலில் படித்த போது இசையை முறையாகக் கற்கவில்லை. பிறகு கற்கத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வரிகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை.

மேற்கத்திய செவ்விசை பயிற்சி தொடர்பாக கடந்த சில மாதங்களாக Bach  இசையமத்த Cantatas எனும் வகை பாடல்களை கேட்டு வருகிறேன். இத்தொகுப்புகளில் பல்வேறு இடங்களில் ராஜா நினைவுக்கு வருவது உண்டு. பதங்களாக, துணுக்குகளாக, வடிவ அமைப்பில் என. ஆனால் இப்படி ராஜாவின் இசை நினைவுக்கு வரும் பொழுதுகள் இப்பொழுதெல்லாம் பழகி விட்டன.

ராஜாவின் இசை இதைவிட சுத்தமாக சம்பந்தமற்ற இடங்களில் நினைவுக்கு வந்து திகைக்க வைத்த பல பொழுதுகள் பல ஆண்டுகளாக  நேர்வதால் இப்படி.

சில துணுக்குகள்:

சில ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தமாக Manchesterல் இருந்தபோது, Manchester United கால்பந்து அணியின் ரசிகன் எனும் புண்ணியத்தில் அலுவலகத்தில் கொஞ்சம் பழக்கம். அதில் ஒருவர் மாட்ச் டிக்கெட் வாங்கித் தருமளவு. அவர் ஒரு Guitarist – Local Band ஒன்றில் இசைப்பவர். ஒரு நாள் இசை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னவற்றில் Animal collective குழுவின் Merriweather மட்டும்தான் நான் கேட்டிருந்த ஒரே தொகுப்பு. அதில் அற்புதமான பாடலான Daily Routine என்ற பாடல் எனக்குப் பிடிக்கும் என்றேன். அவர் அதை ஆமோதித்து அதன் வித்தியாசமான துவக்கத்தைப் பற்றி சொன்னார். ஒரு முறை இதே ideaவை ஒரு ராஜா பாடலில் கேட்டிருந்தேன்.மிகச்சிறிய துணுக்காகத்தான் என்றாலும் மறுமுறை அவரிடம் போட்டுக் காட்டினேன்.

இடம்பெற்றுள்ள துணுக்குகளில் முதல் பாடலின் துவக்க இசையைக் கேட்டுவிட்டு (சுமார் பத்து வினாடிகள்) அடுத்த பாடலுக்குச் செல்லவும்


இதைக் கேட்டுவிட்டு, முதலில் ஆம் சிறிய coincidence என்றவர் மறுபடியும் கேட்டுவிட்டு  ஆம் similar idea தான் என்றார். மறுபடியும் கேட்டு this is more musical என்று அதிசயித்தார்.பலமுறை பலதுணுக்குகள் ராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தி ஏற்படுத்திய திகைப்பை உறுதிப்படுத்தியதிலும் அதனை இன்னொருவருக்குக் கடத்தியதிலும் 
ஒரு மகிழ்ச்சி. இது 70களில் வந்த பாடல் என்பதை சொல்லத் தவறினோமே என இப்போது  தோன்றுகிறது.

இத்தகைய ஒற்றுமைகள் அடிக்கடி நிகழ்பவை. சமீபத்தில் நடந்தவை இவை.

Agalloch என்ற Acoustic Guitar ஒலியை அற்புதமாக பயன்படுத்தும் குழுவை சிலாகித்துக்  கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்களின் இந்த பாடல் ஆரம்பித்ததுமே ராஜா நினைவுக்கு வந்து விட்டார்.


கீழுள்ள பாடலை, முதலில் கேட்ட போது How to Name it தொகுப்பைத் தவறாகப் போட்டு விட்டோம் என்று தோன்றியது.இதில்  Coil குழுவிற்கே உரித்தான உணர்வுநிலையும் HTNI தொகுப்பின் (arpeggiation) துணுக்கும் இணைவது ஆச்சர்யமே.


இப்படி எத்தனையோ துணுக்குகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை மேலோட்டமான ஒப்பீடுகளே. அதேவேளையில் இவை வெறும் ஒலி ரீதியான ஒற்றுமைகளுமல்ல. மேற்கத்திய செவ்விசையில் இது போன்ற ஒற்றுமைகளை மிக எளிதாக ராஜாவிடம் காணலாம். அவரது இடம் அது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இசைத்துணுக்குள் மேற்கின் நவீன இசைக்குழுக்களைச் சார்ந்தவை.இவை இவற்றின் காலத்திற்கு முற்பட்ட ராஜாவின் பாடல்களை  எதேச்சையாக நினைவிற்குக் கொண்டு வருகின்றன.ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை. பல தொகுப்புகளில் இப்படி ஏதாவது வந்து விடுகிறது.

ஆரம்ப காலத்தில் இது போன்ற ஒற்றுமைகள் ஆச்சரியத்தை அளித்தவை. எப்படி துளியும் சம்பந்தமற்ற இரண்டு துருவங்கள் இசையின் சிந்தனையில் இணைகின்றன என்பது விளங்கியதில்லை. ஆனால் இன்று ராஜாவையும், இசையும் குறித்த புரிதலில் தெளிவாகிறது. மேற்கில், உலகில் இனி வரும் அனைத்து இசையும் Common practice period காலகட்டத்தின் இசையில் வெளிவந்ததன் வேறு வடிவங்களாகத்தான் இருக்கும் என்ற கண்ணோட்டம் உண்டு. இதில் உண்மையில்லாமல் இல்லை. ஏனெனில் தொனியியல் இசையின் (Tonality) அத்தனை சாத்தியங்களையும் Bach முதலாக Wagner இறுதியாக உள்ள Common Practice Period காலகட்டத்தில் அத்தனையும் செய்தாகிவிட்டதாகக் கருதுகிறார்கள். Pachelbel இசையமைத்த 17 நூற்றாண்டின் புகழ்பெற்ற canon in D இசையை, Pop இசையின் Godfather ஆக ஒரு pop producer குறிப்பிடுகிறார். அத்தகைய அற்புதமான  harmony அமைப்பு கொண்டது Pachelbel Canon. அதே போல  கர்னாடக இசையின் பின்புலத்தில், பிற இசையை அணுகும் ஒருவருக்கு, சம்பந்தமேயில்லாத அவ்விசையில் ராக பிரயோகங்கள் எதேச்சையாகக் கேட்கலாம்.

இந்த வகையில் கிழக்கும் மேற்குமான இரு செவ்விசை இயக்கங்களின் ஒரு தொடர்(பு)புள்ளியாகத் தோன்றும் ராஜாவின் இசையில் இந்த ஒப்பீடுகள் நிகழாமலிருந்தால் தான் அதிசயம்.ஒரே சிக்கல் கொடூர தோற்றத்தில் இருக்கும் metal கலைஞர்களையும் இந்த வேட்டி சட்டை பழமும் சேர்த்து வைத்து கற்பனை செய்து பார்க்க வேண்டி இருப்பது.


மேலே உள்ளவை ஒரு சோற்றுப் பதம் மட்டுமே. ஒரு இசையனுபவத்தை அணுகுதல் என்பது அதன் உணர்வுதளத்தில், அதன் பின்னணியின் ஒலியனுபவத்தில்,அதன் பின்னணியான ஒலியின் வடிவமைப்பின் நுட்பத்தில், அதன் பின்னணி தத்துவத்தளங்களில்,  இதன் தொடர் வரலாறு என, பல சாத்தியங்களை வழங்குவது. ஒரு செவ்விசை வகைமையைப் பயில்பவனாகவும் பிற இசையியக்கங்ககளைப் பார்க்கும் போதும் ராஜாவின் இசை வேர்கள், இந்த மேலோட்டமான தளத்தில் தொடங்கி  இசை நுட்பங்கள், தத்துவங்கள், வரலாறு என பல்வேறு தளங்களில்  எவ்வளவு ஆழமாகச் செல்கின்றன என்ற பிரமிப்பின் விளைவே இத்தொடரை எழுதச் செய்தது.

நேர்மாறாக தமிழ்ச்சூழலில் ராஜாவின் மேதமை பரவலாக அறியப்பட்டாலும் அவரை ஒரு சினிமா இசையமைப்பாளராக, தமிழ் உணர்வுதளம் மட்டும் சார்ந்த இசையமைப்பாளராக,  ஒரு காலகட்டத்தின் இசையமைப்பாளராக இன்னும் பல்வேறு வகையில் சிலர் சுருக்கும்  போக்குகளைக் காணலாம். ஆம் ராஜா சினிமாவில்தான் இயங்குகிறார். அவரது இசை நமக்கு நெருக்கமான உணர்வு தளத்தில் பேசுகிறது. நமக்கு புரிகின்ற மொழியிலும் நமது களத்திலும் இயங்குவதாலும், அவர் வேட்டி சட்டை அணிந்து தமிழில் பேசுவதாலும் ராஜாவின் இசையை சுருக்குதலென்பது அவ்வளவு எளிதாகிப் போகிறது. இது இளையராஜா பற்றிய புரிதல் பிழை மட்டுமல்ல.

ஒரு ஒப்பீட்டிற்காக மீண்டும் Bach இயற்றிய Cantatas குறித்து. Cantatas என்பது பாடல் வடிவமே. இசை வரலாற்றில், குரலுக்கும் கருவிகளுக்குமாக இசையமைக்கப்பட்ட முதல் இசை வடிவங்களுள் ஒன்று. இது Bach (18ம் நூ) காலத்தில் பெரும்பாலும் Bible பகுதிகளை இசையமைத்து தேவாலயத்தில் கூடும் மக்களுக்கு வழங்க பயன்பட்ட தேவாலய இசை வடிவம். Bach Leipzig நகரில் தேவாலய இசைக்கலைஞராக(church cantor) வேலைக்கு சேர்கிறார்.அங்கே ஒவ்வொரு வாரமும் கூடும் தேவாலயக் கூட்டங்களில் இசைப்பதற்கு பாடல்கள் இயற்றும் பணி. வாரம் ஒரு தொகுப்பென சுமார் 300 தொகுப்புகள். இத்தொகுப்புகள் மிகத்தாமதாகத்தான் பரவலாக வெளிச்சம் பெற்றன. ஏனெனில் இவை தேவாலய இசை எனும் பின்னணியில் சுருக்கப்பட்டு கவனிப்பின்றி இருந்தவை. Bach இயற்றிய பிற படைப்புகளுக்கு இணையாக (well tempered clavier, Art of Fugue, Brandenburg concertos) இவை ஆரம்பத்தில் பேசப்பட்டதில்லை.  இதற்குள் பல cantatas தொலைந்து போகவும் செய்துவிட்டன.Bach ஆராய்ச்சியாளரான Alfred Durr (1971) மூலம் பெரிதும் கவனப்படுத்தப்படுத்தப்பட்டு, இன்று இத்தொகுப்புகள் Bachன் மேதமைக்கு ஒரு மாபெரும் சான்றாக விளங்குபவை. இவ்வகையின் எல்லைகளை, தேவாலய தேவைகளின் எல்லைகளை அனுசரித்தும் சிலவேளைகளில் அவற்றைச் சாதகமாக்கியும் Bach தனது பேரிசையை ஒவ்வொரு பாடலிலும் வாரி வழங்கியிருக்கிறார். Cantatas எனும் வகைமையை Bach ஒரு concerto for voices and instruments ஆக மாற்றியமைத்திருக்கிறார்.  Bach காலத்திற்கு பின்னால் எழுந்த மேற்கத்திய செவ்விசைப் பொற்காலத்தின் பல்வேறு இசை நுட்ப ரீதியான துவக்கப்புள்ளிகளை Bach Cantatas வழங்குகிறது. (1)

அதே நேரத்தில் உலகின் மிகச்சிறந்த ஒரு செவ்விசை கலைஞனின் இசை, பொது மக்களிடம் தொடர்ந்து உரையாற்றிய வரலாற்றையும் இந்த இசை சொல்கின்றது. Bach காலத்தில் இசையமைப்பாளர்கள் அரசவைகளில்(royal court) மற்றும் தேவாலயங்களில் இசையமைக்கிறார்கள். இதன் மூலம் இவ்விரு தளங்களின் இசையும் ஒன்றிலிருந்து மற்றொன்று பெற்றுக் கொள்கிறது. உதாரணமாக Bach காலத்தில் அரசவைகளில் french, Italian பாணிகள் பிரபலம். தேவாலயத்தில் நாட்டு பாணி (German).  Bach தனது முதல் cantataவை french பாணியில் ஆரம்பிக்கிறார் (french dotted rhythm). இவ்வாறு அரசவைகளில் ஒலிக்கும் இசை பொதுமக்களிடம் சென்று சேர்கிறது. தனக்கு அடுத்து வர இருக்கும் மேற்கத்திய செவ்விசையின் பொற்காலங்களுக்குத் தேவையான ஒரு இசை ரசனையும், இசைப் பண்பாட்டையும் வளர்த்த முக்கியமான இசை வடிவமாக இன்று Baroque கால தேவாலய இசையும் குறிப்பாக Bach cantatasம் முன்வைக்கப் படுகின்றன.

இசை போன்ற பயிற்சியும், நிகழ்த்துதலும் சார்ந்த கலையின் இயங்கு தளங்கள் வரலாறு முழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. தேவாலயங்கள், கோயில்கள், பணக்கார வீடுகள், அரசவைகள், மேடைகள், திரைப்படம் என  வரலாறு முழுதும் தேவைக்காகவும், வேறு வழியின்றியும் இசை இயங்கி இருக்கிறது. இசையின் மேன்மையை அதன் பண்புதான் உணர்த்துமே அல்லாமல் அதன் இயங்கு தளமோ, புறகாரணிகளோ அல்ல. ராஜாவை இயங்கும் களத்தை வைத்தும், அவரது இசை மக்களின் இசையாகவும் திகழ்வதாலும் சுருக்கும் போக்குகளின் அபத்தத்தையும், இவற்றைக் கடந்து ராஜாவை அணுக வேண்டிய தேவைகளையும் குறிக்கவே மேற்சொன்ன ஒப்பீடு.

ஏனெனில் உலக இசையியக்கங்களின் இணையியக்கமாகவும், இதன் பின்னணியற்ற நமது சூழலில் இவ்விசையியக்கங்களின் சாளரமாகவும் இன்று ராஜாவின் இசை திகழ்கிறது. அதன் அழகியலில் நமக்கு நெருக்கமாகவும், அதன் இசை நயத்தில் செவ்விசை மரபுகளின் வழி நிற்கும் ராஜாவின் இசை, ஒரு தனித்துவமான இசைவகைமையாகவே உருமாறியிருக்கிறது. இரு செவ்விசை மரபுகளுக்கும், நாட்டுப்புற இசைக்கும், இன்னபிற வகைமைகளுக்கும், திரை ஊடகத்திற்கும், நடுவில் இயங்கும் இந்த படைப்பு மனம், மனித இசையாற்றல் எனும்  கூட்டு முயற்சிக்கு மகத்தான பங்களித்திருக்கிறது.

இதையே தமிழ்தளத்தில் பார்த்தால், அற்புதமான இசையறிவியல் கொண்ட, உலகின்  தொன்மையான, தனித்துவமான இசைப்பண்பாடுகளுள் ஒன்றான தமிழிசை வரலாறு குறித்து, அபிரகாம பண்டிதரில் ஆரம்பித்து இந்நூற்றாண்டில் தமிழிசை குறித்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் ராஜாவின் மூலமாக புத்துயிர் பெறுகின்றன.

திரையிசையின் தளத்தில், தனக்கு முன்னால் இயங்கிய மேதைகளின் வழி நின்று ராஜாவின் இசை அதனைப் பலமடங்கு விரிவு படுத்துகிறது.

இன்று 1000 படங்களும், 40 ஆண்டுகளும் கடந்து எண்ணிக்கை அளவிலும் செவ்விசை பொற்கால நாயகர்களை நினைவுபடுத்திச் சென்று கொண்டிருக்கும் இந்த இசையியக்கத்தை, இன்றைய “உடனடி” சூழலிலிருந்து மட்டுமல்லாமல், இசை வரலாற்றின் பின்னணியிலும், பிற இசையியக்கங்களுக்கு அருகிலும் வைத்து புரிந்து கொள்ளப் பட வேண்டும் என்ற விருப்பமே இத்தொடர் கட்டுரை. இப்படிப் பார்ப்பதன் மூலமே தமிழ் இசைச் சூழலின் வரலாற்றையும், அதன் சிக்கலையும், ராஜாவின் முக்கியத்துவத்தையும், அவர் நிரப்பும் வெற்றிடங்களையும், அவரது இசையின் வழியாக விளைந்திருக்கும் துவக்கப்புள்ளிகளையும், இன்றைய இசைச்சூழலில் அவரது தனித்துவத்தையும், தேவையையும், அவர் இசையில் சங்கமிக்கும் இசை வரலாறுகளையும் இசைத்தத்துவங்களையும் நாம் புரிந்து கொள்ளத் துவங்க முடியும்.

…………………………………………………………………………………………………………………..

தொடர்புடைய குறிப்புகள்

(1)  http://www.let.rug.nl/Linguistics/diversen/bach/cantatas/introduction.html

7 comments

  1. அற்புதமான கட்டுரை! இந்த மாதிரி நுட்பமான அலசல் தான் இசை அறியாத என்னை போன்றவர்களுக்குத் தேவை. நன்றி.

    amas32

    Like

  2. I felt something special in IR music when I was 14 yrs in 1979 but it took me another 25 yrs to know how special it was . It keeps you young it increases your memory most of all it keeps u healthy and happy . Dr . P. Ravichandran .

    Like

  3. மிக அற்புதமான கட்டுரை.

    ராஜாவை மதிப்பிடுபவர்கள் சினிமா என்ற தளத்தின் நோக்கிலேயே பார்ப்பது இன்றைய கால அநியாயம் என்றே தோன்றுகிறது. அவரது இரு சமீப படைப்புகள் அதிகம் பேசப்பட்டு கொண்டாடப்படாததற்கும் இந்த சூழலே காரணம். உதாரணம், ’நந்தலாலா’ -வின் பின்னணி இசை. இது, பெரும்பாலும், ஒரு flute sonata -வாக அமைக்கப்பட்ட இசை, அங்கங்கு Oboe -வை பயன்படுத்தினாலும், இத்தகைய அழகு வாய்ந்த இன்னிசை சமீப காலத்தில் வரவில்லை. என்ன, மேற்கத்திய இசை என்றவுடன் நம்மவர்களுக்குப் புரிவதில்லை.

    சரி, நம்மவர்களுக்கு சரியாக புரியும்படி ராஜா 2012 -ல் செய்த ‘ராம ராஜ்யம்’ தெலுங்கு திரைப்படப் பின்னணி இசையில் நம் இசையும், வட நாட்டுக் கருவிகளுடன், மேற்கத்திய இசை அழகாக வலம் வந்தது. இதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், ராஜா ஒன்றும் சோர்ந்து விடவில்லை.

    இவரது ‘ஓனாயும் ஆட்டுக்குட்டியும்’ பின்னணி இசை ஒத்திசையின் (harmony) உச்சகட்டம். தனி வெளியீடாக வந்துள்ள இந்த இசை வடிவம், எந்த ஒரு மேல்நாட்டுப் பின்னணி இசைக்கும் குறைந்தது அல்ல.

    Fugue போன்ற அசை வடிவங்களை மேகத்திய செவ்வியல் இசைக் கலைஞர்களே அருகே செல்ல பயப்படுகையில், இவர் போகிற போக்கில், தன்னுடைய இடையிசையில் அள்ளி வீசுகிறார்.

    சத்தமாக இசையமைப்பவர்கள் மேல்நாட்டு இசையை அறிந்தவர்கள் என்பது நம்முடையவர்களின் பொது கணிப்பு. இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்வது. ராஜா என்றவுடன் கிராமிய பாடல்கள் அளித்தவர் என்பதே பலரின் கருத்து. அவரது ‘நாட்டார் இசை’, உண்மையில் நாட்டார் இசையே அல்ல – இதை அவரும் ஒப்புக் கொள்கிறார், அவரது பல நாட்டுப்புறப் பாடல்களில் மிக புத்திசாலித்தனமான மேகத்திய செவ்வியல் அடங்கியுள்ளது பொதுமக்கள் பலரும் அறியாதது.

    ராஜாவின் மேதமை, அவரது காலத்திற்குப் பின்பே புரிந்து கொள்ள முடியும். நம்மவர்கள், இதை ஏதோ ஒரு மேல்நாட்டவர் சொல்ல, முகநூலில் ’லைக்’ போட்டு நகர்ந்து விடும் கூட்டம்.

    தொடரந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    Like

  4. மிக அருமை, 👏👏👏
    இசையறிவோடு கூடிய மதிநுட்பமான ஆராய்ச்சி. 👍👍தொடருங்கள். மனமார்ந்த வாழ்த்துகள் மேஸ்ட்ரோவின் 🎹🎼🎻🎺 கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பில்.

    Like

Leave a comment